Wednesday, December 8, 2010

ஆர்யா பிரச்னைக்கு முற்றுப்புள்ளி : குகநாதன் அறிக்கை


VC Guganathan comes to Arya`s rescueதமிழ் சினிமாவையும், தமிழ் ரசிகர்களையும் இழிவுபடுத்தி பேசிய நடிகர் ஆர்யாவுக்கு பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன் கண்டனம் தெரிவித்த விவகாரம் திரையுலகில் பெரும் புயலாக கிளம்பியது. குகநாதனுக்கு
நடிகர் சங்க நிர்வாகிகள் கண்டனம் தெரிவிப்பதும், அதற்கு குகநாதன் பதில் சொல்வதுமாக வளர்ந்து வந்த இந்த பிரச்னை தொடர்பாக நடிகர் அர்யா நடிகர் சங்கத்திற்கு கொடுத்த விளக்க கடிதத்தில், தான் தமிழ் ரசிகர்களையும், தமிழ் திரையுலகினரையும் தரக்குறைவாக பேசவில்லை என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி வி.சி.குகநாதன் புதிய அறிக்கையொன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"தமது எழுத்தாலும், பேச்சாலும் ஆட்சிக் கட்டிலுக்கு சென்றவர்கள் அண்ணாவும், கலைஞரும். தமது நடிப்பாலும் கொள்கையாலும் ஆட்சியை பிடித்தவர் எம்.ஜி.ஆர். அதேப்போல்தான் ஜெயலலிதாவும். இவர்கள் அரசியலில் மட்டுமல்ல திரையுலகிலும் மற்றவர்களது மனம் புண்படாமல் பேசி அரவணைத்து சென்றவர்கள். அதேபோல்தான் கமல் உள்ளிட்ட இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் இருந்து வருகிறார்கள். இதையும் தாண்டி சில சமயம் பொது மேடைகளில் பேசும்போது சர்ச்சைகளுக்கு ஆளாகிவிடுகிறார்கள் இன்றைய நட்சத்திரங்கள். அவ்வாறு ஆளாகக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் அமைப்புகளின் பொறுப்பில் உள்ளவர்கள் வழிகாட்டும் நோக்கோத்தோடு பேசுகிறார்கள். தான் இருக்கும் இடத்தை பற்றி பேசுவதிலே மிகவும் எச்சரிக்கை உணர்வோடு வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும்.
ஏன் என்றால் கலைஞர்கள் மக்களின் பொது சொத்து போன்றவர்கள். காலமானாலும், காலம் கடந்தும் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்து, தலைமுறை தாண்டியும் இருந்து கொண்டிருப்பவர்கள் கலைஞர்கள். அதனால்தான் வயதில் மூத்தவர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். முறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லப்பட்ட ஒரு கருத்து திசைமாறி சென்றதால்தான் இந்த அறிக்கை. நான் மேடையில் பேசும்போது அந்த நடிகரின் பெயரை குறிப்பிடமால்தான் பேசினேன்...ஆனால் பிரச்சினை திசைமாறி செல்கிறது. அது கூடாது. கலைஞர்கள் மனது மென்மையானது. அது காயப்படக் கூடாது. இனி வரும் காலத்தில் இதுப்போல் பிரச்சினை வந்தால் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.
இன உணர்வு வேண்டும். ஆனால் அது ஒரு நாளில் வந்துவிடாது. அதற்காக ஒரு நாள் போராட்டமோ அடையாள உண்ணாவிரதமோ அவசியம் இல்லை. கலைஞர்களுக்கு தான் பிறந்த இடத்தின் மீது உணர்வு உள்ளதுபோல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இடத்தின் மீது உணர்வு பற்று இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் என் கருத்தை கூறினேன். ஆகவே இந்த பிரச்னையை வளர விடாமல் இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.(dinamalar) 






No comments:

Post a Comment