
பிரபல சிகரெட் நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டின் அடுத்த இசைப்புயல் நீங்களா? என்ற விளம்பரத்தை ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட்டது. இசை நிகழ்ச்சி நடத்தி சிகரெட் பிராண்ட்டை பிரபலப்படுத்தும் வகையில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டது. இசை நிகழ்ச்சிகள் மூலம் புகைப்பழக்கம் திணிக்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி அப்போதே அறிக்கை விட்டார். இந்நிலையில் மேற்படி இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்த்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வது சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடைச்சட்டம் 2003 பிரிவு 5ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். சென்னை நகரில் பல இடங்களில் போர் தமிழ்நாட்டின் அடுத்த இசைப்புயல் நீங்களா? என்ற விளம்பரம் பல கடைகளில் வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த இசை நிகழ்ச்சிக்காக நுழைவுச்சீட்டுகளும் இளைஞர்களுக்கு வழங்கப்படுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் பெறப்பட்டது.
அதன் அடிப்படையில் மாநில புகையிலை கட்டுப்பாட்டு அலுவலர்களால் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. மேற்படி ஆய்வில் கடந்த ஜனவரி மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் சென்னை கோடம்பாக்கம் பத்மராம் மகால், தியாகராயநகர் விஜயமகால் ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பாடகர் கார்த்திக், பாடகி சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. அடுத்து நடக்கவிருக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளில் பாடகர் ரஞ்சித், பாடகி மாதங்கி ஆகியோர் கலந்து கொள்ள போவதாகவும் தெரியவந்துள்ளது. சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடைச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள நிறுவனத்திற்கு இந்த இசை நிகழ்ச்சிகளை நிறுத்தகோரி சட்டப்பூர்வமான அறிவிப்பு கடிதம் அளித்துள்ளது.
மேலும் கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களுக்கும், அடுத்து நடக்கவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்த இசையமைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.(dinamalar)
No comments:
Post a Comment