எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ நடிகர் கமல்ஹாசன் புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
"எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சரியான கல்வி, ஊட்டச் சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை. இம்மாதிரி குழந்தைகளுக்கு பொதுமக்கள் தரும் ஆதரவு அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தினை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் கனவுகள் உண்டு. அவர்களின் கனவுகளை நினைவாக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். எச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கும் வாழ அனைத்து உரிமைகளும் உள்ளன. அந்த உரிமைகளை பாதுகாப்பது நமது கடமை என்பதை மறந்துவிடக் கூடாது. இதுபோன்ற குழந்தைகளுக்காக உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். 25 வருடமாக நான் செய்யாத ஒரு விஷயத்தை செய்யப்போகிறேன். நான் வேண்டாம் என்று ஒதுக்கி வந்த ஒன்று. விளம்பரப் படங்களில் நடிப்பதை இந்த குழந்தைகளுக்காக செய்யப்போகிறேன். நான் ஒரு பொருளை விற்பனை செய்ய வியாபாரி இல்லை. நான் நடிகன் அதனால் என்னுடைய நடிப்பு வேலையை செய்துவந்தேன். இப்போது எச்.ஐ.வி. குழந்தைகளின் நலனுக்காக விளம்பரப் படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் அதில் வரும் வருமானத்தை, நான் எனக்காக பயன்படுத்தப் போவதில்லை. அது என்னுடையது அல்ல. நம்முடையது. அந்தப் பணத்தை எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுப்பதாக முடிவு செய்துள்ளேன், என்றார்.மேலும் அவர் கூறுகையில், நான் தனி மனிதனாக கொடுக்கும் பணத்தைப் போல, இரண்டு மடங்கு பணத்தை இந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் கொடுக்குமேயானால் அது நன்றாக இருக்கும். அரசாங்கத்துக்கு இது ஒரு வேண்டுகோள்தான். கோரிக்கை அல்ல, என்றார்.
No comments:
Post a Comment