Monday, November 15, 2010

நல்லதும் கெட்டதும் கலந்த சினிமா: சுந்தர்.சி





"5 வருஷத்துக்குப் பின் நான் இயக்கும் படம் "நகரம்'. தலைநகரத்தின் சாயல் கொஞ்சம் கூட இல்லை. நீண்ட நாள் நின்று நிதானித்து பிடித்த கதை. சென்னை நகரம் ஒருவனை எப்படி பிரச்னைகளில் சிக்க வைத்து பந்தாடுதுன்னு சினிமாத் தனம் கலந்து சொல்லப் போகிறேன். சுந்தர். சி படம் எப்படி இருக்குமோ அதில் துளிக் கூட மாற்றம் இருக்காது.'' மென்மையாகப் பேசுகிறார் சுந்தர்.சி. 
வெகு ஜன மக்களின் ரசனைக்கு படம் எடுப்பவர் நீங்கள், இதுவும் அப்படித்தானே?
நல்லதும், கெட்டதும் கலந்ததுதான் சினிமா. இதில் வியாபார ரிதீயிலான விஷயங்களை சேர்க்கும் போது அது வெகுஜன மக்களின் ரசனைக்கு போகிறது. "தலைநகரம்' ரிலீசுக்குப் பின் இந்தக் கதை என்னுள் இறங்கி விட்டது. சாவு துரத்தும் வாழ்க்கை வாழும் ஒரு ரவுடியின் கதை "தலைநகரம்'. கொஞ்சம் காதல், நிறைய ஆக்ஷன் துணைக்கு வடிவேலு என நிறைய விஷயங்கள் அதில் இருந்தது. அது போல் இதிலும் சில விஷயங்கள் துணைக்கு இருக்கு. முக்கியமாக வடிவேலு இருக்கார். சென்னை நகரத் தெருக்களில் நீங்கள் பார்க்கும் பத்தில் ஒருவனின் வாழ்க்கைதான் இது. நீங்களும் ஒரு வேளை இந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். இனி வாழலாம். ஒரு மனிதன் நல்லவனாக வாழ்ந்தான் என்றுதான் இங்கு பாதி கதைகள் முடிக்கப்படுகின்றன. அதுதான் இதில் தொடக்கம். பிரச்னைகளை வேண்டாம் என்று நினைக்கிற ஒருவனை பிரச்னைகள் துரத்தி துரத்தி கொத்தினால் என்னவாகும் என்பதுதான் கதை. அப்போ இதில் நல்லது கெட்டது இருக்கவே செய்யும்.
"அன்பே சிவம்' மாதிரி ஒரு மாற்று சினிமா இருக்குமா?
சினிமா முன்பு மாதிரி இல்லை. "உள்ளத்தை அள்ளித்தா' படம் இப்போது வந்திருந்தால் நான் சினிமாவில் இருந்திருக்க முடியுமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. சினிமாவை ரசித்து, நேசித்து சென்னைக்கு வந்தவன் நான். "உள்ளத்தை அள்ளித்தா' படம் வெளியான பத்து நாள் தியேட்டர் காலி. பின்புதான் நல்ல ரிசல்ட். அப்படி ஒரு நிலை இப்போது வந்தால் ஒரே நாளில் பெட்டிக்கு வந்து விடும் படம். எல்லாமே நாளுக்கு நாள் மாறுது. பத்து நாள் கழித்து நிறைய மாற்றம் இருக்கும். தொடர்ச்சியான பணம், புகழ் என எதிலும் கவனமில்லை.  மக்கள் ரசிக்க அவ்வப்போது ஒரு படம் கொடுத்தால் போதும். நாளுக்கு நாள் பேஷன் என சொல்லி இங்கு நிறைய மாற்றம் இருக்கு.  இதில் சினிமாவை மட்டும் எப்படி திட்டம் போட்டு வைத்திருப்பது. லட்சியம், கனவு இதை இனி சினிமாவில் செய்ய நிறைய தைரியம் வேண்டும். இது நான் இயக்கும் 24-வது படம். இதுவே எனக்கு பெருமை. அடுத்து ஒரு படம் ஹீரோவாக நடிக்கலாம் என எண்ணம் இருக்கு. அழகா, அபூர்வமா "அன்பே சிவம்' மாதிரி ஒரு சினிமா இயக்கவும் ஆர்வம் இருக்கு. எது நடந்தாலும் ஆதரிங்க. சுருக்கமாக பேசி முடிக்கிறார் சுந்தர்.சி.    

No comments:

Post a Comment