""மக்கள் நினைத்தால் தமிழகத்திலும் கண்ணியமான தேர்தல் நடக்கும்,'' என, திருச்சியில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி பேசினார்.
உந்துனர் அறக்கட்டளை, லஞ்சத்துக்கு எதிரான ஐந்தாவது தூண் அமைப்பு சார்பில், "கண்ணியமான தேர்தல் - 2011' குறித்து சமூக ஆர்வலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி பேசியதாவது:உலகளவில் 60 ஆண்டைக் கடந்து நிற்கும் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இது பெரிய விஷயம். "ஜனநாயகம் தான் நம் நாட்டை ஆள வேண்டும்' என்று நம்மைப் போல் நிறைய பேர் எண்ணியதால் தான் இன்றும் ஜனநாயகம் நிலைத்து நிற்கிறது.அனைவரும் வாக்காளர் பெயர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். வரும் ஜனவரி விடுபட்டவர்களுக்காக மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்; அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.வாக்காளர் பட்டியலில் 18 முதல் 25 வயதுடையவர் 30 சதவீதம் பேர் மட்டுமே தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இதற்கு இளைஞர்கள் வெளியூரில் தங்கி படிப்பது ஒரு காரணம். வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள், அந்த பகுதியில் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.நகர்ப்புறத்தை விட கிராமப்புறத்தில் வாக்காளர் பெயர் பட்டியலில் இளைஞர்களின் பெயர் அதிகம் இடம் பெற்றுள்ளது. தவறான தகவல்களைத் தந்து போட்டியிடுபவர்களை தகுதியிழப்பு செய்யும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு உள்ளது.மக்களின் கைகளில் தான் இந்த நாட்டை மாற்றும் அதிகாரம் உள்ளது. நீங்கள் நினைத்தால், இந்த ஜனநாயகத்தில் கண்ணியமான தேர்தல் நடக்கும். நாம் நினைத்தால் தமிழகத்திலும் கண்ணியமான தேர்தல் நடக்கும். இவ்வாறு கோபாலசாமி பேசினார்.
No comments:
Post a Comment