Sunday, February 20, 2011

படத்தை ரிலீஸ் பண்ண முடியல! - சரவணன்

திமுக ஆட்சி சினிமாக்காரர்களுக்கு நன்மை செய்வது போல போக்குக் காட்டி, தங்கள் குடும்பத்துக்கு சாதகமாக இந்தத் துறையை வளைத்துவிட்டது. இந்த ஆட்சியில்,
அவர்களது கட்சிக்காரர்களால் கூட படத்தை வெளியிட முடியவில்லை. எல்லாமே ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் பிடியில் உள்ளது, என்றார் நடிகர் சரவணன்.

நேற்றும் சேலத்துக்கு வந்த நடிகரும் அதிமுக பேச்சாளருமான சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. ஜெயலலிதாவின் துணிச்சல் மற்றும் ஏழை மக்களுக்காக அவர் மட்டுமே குரல் கொடுத்து வருகிறார் என்பதால்தான் நான் அ.தி.மு.க.வில் இணைந்தேன்.

சின்ன வயதில் இருந்தே அ.தி.மு.க.வில் சேர வேண்டும் என்று நினைத்து இருந்தேன். இப்போதுதான் அதற்கான நேரம் வந்துள்ளது.

நான் அ.தி.மு.க.வில் சேர்ந்த போது தேர்தலில் பிரசாரம் செய்வீர்களா என்று ஜெயலலிதா கேட்டார். பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று அவரிடம் கூறினேன். அதன்படி கடந்த 10 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். நான் செல்லும் இடம் எல்லாம் ஆட்சி மாற்றம் எப்போது வரும் என்று பெண்கள் ஆர்வமாக கேட்டு வருவதை பார்க்கிறேன்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக நான் நடிக்கும் பட சூட்டிங்குகளை தள்ளி வைத்து உள்ளேன்.

தமிழ்நாட்டில் திரைப்படத்துறை மோசமான நிலையில் உள்ளது. இந்தத் துறைக்கு நல்லது செய்வது போல போக்குக் காட்டி, அவர்கள் பக்கம் வளைத்துக் கொண்டார்கள். சினிமாவை அவர்கள் குடும்பமே ஆக்கிரமித்துவிட்டது. இதனால் அவர்களது கட்சியை சேர்ந்த பாக்யராஜ் மற்றும் சுந்தர்.சி. போன்றவர்களால்கூட தங்கள் படத்தை வெளியிட முடியாத நிலை. அவர்களால் வெளியே சொல்ல முடியவில்லை.

சினிமாவில் மக்களை காக்க ஹீரோ வருவார். அது போல தமிழக மக்களை காப்பாற்றும் முதல் அமைச்சராக ஜெயலலிதா வருவார்.

வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதுவும் எனக்கில்லை. ஆனால் ஜெயலலிதா கட்டளைப்படி செயல்படுவேன்", என்றார்

No comments:

Post a Comment