F
காவலன் ரிலீஸ், அரசியல் பிரவேசம், அஜித்துடனான சந்திப்பு என விஜயுடன் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஹாய்.. என கை குலுக்கி வரவேற்றவரிடம் சில கேள்விகள்.* விஜய் அரசியலில் நுழைந்து விடுவார் என்பதால்தான் காவலனுக்குப் பிரச்னை என்று நினைக்கிறீர்களா? இந்த நொடி வரைக்கும் தெரியவில்லை. என்ன நடந்தது, எது நடந்தது என்பதை அலசிப் பார்க்கவும் வகையில்லாமல் இருக்கிறது. எதுக்குப் பிரச்னை. யாருக்கு என் மேல் கோபம், அப்படி கோபம் ஏற்படும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை. யார், எப்படி என்று தெரிந்தால் நானே இறங்கிப் போராடலாம். நிறைய விஷயங்கள் நடந்து முடிந்திருக்கிறது. இது எனக்கு புது அனுபவம். 50 படங்களில் நடித்து விட்டு திரும்பிப் பார்த்தால் எனக்கே ஆச்சரியம். படத்தோட ரிலீஸ் தேதி ஒரு நாள் தள்ளிப் போனது, எந்தப் படத்துக்கும் நடக்காத ஒன்று. நிறையப் பிரச்னைகளை நானே கடைசி நேரத்தில் பேசி முடித்து சுமுகத் தீர்வு கண்டிருக்கிறேன். இப்போது நடந்த பிரச்னைக்கு யார் மூல காரணம் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. அதையும் தாண்டி 350 தியேட்டர்களில் "காவலன்' வெளிவந்திருக்கிறது. நல்ல "ரிசல்ட்' என்று சொல்கிறார்கள். புது அனுபவத்தைக் கற்றுத் தந்தவர்களுக்கும், அதை தந்துபோன காவலனுக்கும் நன்றி. * ரஜினி, கமலுக்குப் பின் 50 படங்களை முடித்து உள்ளீர்கள். திடீரென "காவலன்' படத்தில் ஆக்ஷனை விட்டு காதல் பாணிக்கு மாறியிருக்கிறீர்களே ஏன்? அது என் பாணிதான். கொஞ்ச காலம் ஆக்ஷன் செய்து பார்த்தேன். அதில் திருப்தி. இப்போது நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தது, மீண்டும் காதலித்துப் பார்க்கலாம் என்று இறங்கிவிட்டேன், அவ்வளவுதான். இப்போது எல்லோருக்கும் காவலனைப் பிடித்திருக்கிறது. எனக்கும் சந்தோஷம். அரிவாள், கத்தி, கட்டைன்னு சுத்திக்கிட்டு இருந்துட்டு அழகா, அற்புதமா ஒரு கதை செய்ததில் இன்னும் கூடுதல் சந்தோஷம். கண்கள் கலங்குகிற கிளைமாக்ஸ், ஜாலியான கதை, கொஞ்சம் காமெடின்னு நடித்துப் பார்க்க இன்னும் ஆசை இருக்கிறது. இப்போது பணியாற்றும் "வேலாயுதமும்' ஒரு வித்தியாசமான கதை. அழகான இரண்டு ஹீரோயின்கள், பரபரக்கிற சண்டைக் காட்சிகள் என்று சிரமப்பட்டு படப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இதுவும் உங்களுக்குப் புதிதாக இருக்கும்.* சினிமாவை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒவ்வொரு படத்திலும் நிச்சயம் அரசியல் பொடி தூவியே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால், உங்கள் படங்களில் அது இல்லையே ஏன்? என் சினிமாக்களில் அரசியல் இருக்கிறது. ஆனால் ஒரேடியாக அதை தந்துவிட முடியாது. இப்போது இருக்கும் தலைமுறை தெளிவாக இருக்கிறார்கள். அரசியலை சினிமாவோடு இணைத்துப் பார்க்கிற, பேசுகிற மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அவர்கள் நினைத்தால் எல்லாம் எடுபடும். சினிமாவில் அரசியல் பொடி தூவி வசனம் பேசுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நேரம் கூடி வரும்போது அதை நீங்கள் பார்க்கலாம்.* அரசியலுக்கு வருவது பற்றிய முடிவுக்கு வந்து விட்டீர்களா? அரசியலில் எனக்கு ஆர்வம் இருக்கிறது என்று எப்போதோ சொல்லி விட்டேன். ஆனால் அது எப்போது என்று இப்போது சொல்ல முடியாது. வருவேன், ஆனால், இப்ப...அப்பன்னு சொல்லிக் கொண்டே இருந்தால் மக்களுக்கே போரடித்து விடும். எல்லோரையும் ஒன்று திரட்டி அரசியலில் இறங்கும்போது மக்கள் அதைப் பெரிசா பேச மாட்டாங்க. எனது அரசியல் பிரவேசம் பற்றி வரும் செய்திகளை படிக்கும்போது எனக்கே புதிதாக இருக்கிறது. முதல் மாநில மாநாட்டை திருச்சியில் கூட்டப் போகிறேன் என்றுகூட செய்தி வெளியிடுகிறார்கள். அதில் உண்மையில்லை. அது பற்றி எந்த முடிவுக்கும் வரவில்லை. இந்த விஷயத்தில் என்னைச் சுற்றி இருப்பவர்களின் எண்ணம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதே சமயம் காலமும், நேரமும், இடமும், சூழலும் அனுமதிக்கும்போது என்னை அந்த இடத்தில் கொண்டு போய் வைப்பேன். அப்படிச் செய்வதில் தயங்க மாட்டேன்.* அஜித்துடன் என்ன பேசினீர்கள்? (மௌனம் காக்கிறார்) இப்போது வேண்டாம்.* கிராமத்து இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் திருப்ப ஏதாவது செய்ய தோன்றுகிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏதாவது யோசனை இருக்கிறதா? கிராமத்து இளைஞர்கள் எல்லோரையும் விவசாயத்தின் பக்கம் திருப்ப வேண்டும் என்று ஆசை இருக்கிறது. எல்லோருக்கும் விவசாயம் மறந்து கொண்டே வருகிறது. சென்னைக்கும், வெளிநாடுகளுக்கும் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதுக்காக இந்த நொடியில் ஒரு படத்தில் நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அதுதான் இப்போது என்னால் முடியும். ஆனால் அவர்களை முழுமையாக விவசாயத்தின் பக்கம் திசை திருப்ப ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment